Search This Blog

Wednesday, July 21, 2010

சாபம்

சில நாட்களுக்கு முன்பு ஒரு நெருங்கிய உறவினர் ஒருவருடைய இறுதி சடங்குக்கு செல்ல வேண்டியிருந்தது. அவரின் உடலை ஒரு வாகனத்தில் வைத்து எடுத்து சென்றனர் அதன் பின்னே எங்கள் வாகனம் சென்றது. சுடுகாடை அடைந்ததும் அவரின் உடலை சுமந்து கொண்டு உள்ளே சென்றனர். வெகு நாட்களுக்கு பிறகு ஒரு இறுதி சடங்கை மிக அருகில் இருந்து பார்த்தேன்.

அங்கே இருந்த அதிகாரிகள் நாங்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே உடலை கொண்டு வந்துவிட்டதாக கூறி எங்களை சற்று காத்திருக்க சொன்னார்கள். எங்களுக்கு முன்னரி இரு உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்று கூறி விட்டார்கள்.உடலை சற்றி ஓரமாக வைத்துவிட்டு அனைவரும் காத்திருக்க தொடங்கினோம் அந்த இரு உடல்களுக்கும்.

அந்த சுடுகாட்டில் புதைக்கும் இடமும் இருந்தது எரிக்கும் இடமும் இருந்தது. புதைக்கும் இடம் நம் ஊருக்கு எடுத்துக்காட்டாக முற்றிலும் பராமரிக்கப்படாமல் இருந்தது. எரிக்கும் இடம் ஒரு மிக பிரமாண்டமான கட்டிடமாக கட்டப்பட்டிருந்தது. ஒரு பெரிய புகை கூண்டு இருந்தது. அந்த இடத்தில் நாங்கள் ஒரு பெரிய கூட்டமாயிருந்தும் ஒரு வித அமானுஷ்யமான அமைதி நிலவியது. ஒவ்வொரு மூலையிலும் ஒரு மிகப்பெரிய சோகம் ஒரு விதமான வேதனையே நிரம்பியிருந்தது.

சற்று நேரத்தில் வரவேண்டிய உடல் வந்து சேர உள்ளே கொண்டு சென்று சில கடைசி நிமிஷ சடங்குகளை செய்தார்கள். ஒரே அழுகை சத்தம். சற்று நேரத்தில் உடல் எரிக்க கொடுக்கப்பட்டது என்பதை உணார்த்தும் விதமாக கறுப்பாய் இருந்த அந்த புகை கூண்டில் இருந்து வந்த புகை உணர்த்தியது.

எங்கும் ஒரே வேதனை கலந்த அமைதி.

மழை பிடித்துக் கொண்டது. பெரிய மழை. மழையையும் கிழித்துக் கொண்டு அந்த புகை வானை நோக்கி சென்றது. ஒரு விதமான வாசனை காற்றில் நிரம்பியிருந்தது.

அடுத்து வரவேண்டிய உடல் வர தாமதமானதால் எங்களை அடுத்து அனுப்பினார்கள். எல்லா சடங்குகளையும் அருகே இருந்து பார்த்தேன். அந்த பிராமாண்டமான கட்டிடத்தின் உள்ளே உள்ள ஒரு பெரிய ஹாலில் இருந்த ஒரு மேடையில் உடலை வைத்து சடங்குகளை செய்தார்கள்.

சுற்றியிருந்த சுவற்றை பார்த்தேன் கருப்பாய் அழுக்கு பிடித்து இருந்தது. வெளியே மழை பொட்டிக் கொண்டிருந்தது. போடப்பட்டிருந்த விளக்குகளின் பிரகாசமும் அங்கு நிலவிய அந்த வேதனையை போக்க முடியவில்லை.

சற்று நேரத்தில் நாங்கள் கொண்டு சென்றவரின் உடலும் மற்றொரு மிகப்பரிய ஹாலில் இருந்த ஒரு பெரிய அடுப்புக்குள் கொடுக்கப்பட்டது.

அதற்குள்ளாக அடுத்த உடல் வந்து சேர அழுகையின் ஓலம் ஓயவில்லை அங்கே.

அங்கே சற்று கவனித்தால் அந்த சுடுகாடின் சுற்றுப்புற சுவற்றை தாண்டிய அடுத்த அங்குலத்தில் அந்த சோகம் இல்லை. மக்கள் அவரவர் வேலைகளில் மும்முரமாயிருந்தார்கள். அங்கே அந்த சோகம் இல்லை.

ஆனால் இந்தப்புறமோ அழுகையும் வேதனையும்.

சில இடங்கள் சந்தோஷமான விஷ்யங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுவிடுகின்றன. அந்த இடங்கள் பாக்கியம் செய்தவை. அங்கே எப்பொழுதும் சிரிப்பொலியும் சந்தோஷமும் தான். உதாரணம் திருமண மண்டபங்கள்.

ஆனால் சில இடங்கள் சந்திப்பது எப்பொழுது வேதனையையும் சோகத்தையும் தான். இன்னும் ஆண்டுகள் பலவானாலும் அங்கே கேட்கப் போவது மரண ஓலம் தான். அந்த இடங்கள் எல்லாம் சபிக்கப்பட்ட இடங்களைப்போல மேலும் மேலும் வேதனைகளையே காண்கின்றன.

சில நேரங்களில் மனிதர்களிலும் அப்படி தான். சிலர் சபிக்கப்பட்டவர்களாய் எப்பொழுது வேதனையையே காண நேரிடுகிறது.

No comments:

Beautiful Boy